மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ரூ.42¾ லட்சம் காணிக்கை வசூல்
மாசிக்கொடை விழா நாட்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ரூ.42¾ லட்சம் காணிக்கை வசூலானது.
மணவாளக்குறிச்சி:
மாசிக்கொடை விழா நாட்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ரூ.42¾ லட்சம் காணிக்கை வசூலானது.
மாசிக்கொடை விழா
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி நள்ளிரவு ஒடுக்குப் பூஜையுடன் நிறைவடைந்தது.
இந்த விழா நாட்களில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவிலில் 9 நிரந்தர உண்டியல்கள், 7 திறந்த நிலை உண்டியல்கள் (வார்ப்புகள்) என மொத்தம் 16 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை
இந்த உண்டியல்கள் நேற்று முன்தினம் மாவட்ட திருக்கோவில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், ஆய்வாளர் செல்வி ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், வெள்ளிமலை ஸ்ரீகாரியம் ராஜசேகர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுவினர், கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி ரூ.29 லட்சத்து 10 ஆயிரத்து 316 காணிக்கை வசூலானது. மேலும் 9.700 கிராம் தங்கம், 13 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
ரூ.42¾ லட்சம் வசூல்
மாசிக்கொடை தொடங்கிய பிறகு ஏற்கனவே 6-ந் தேதி 7 திறந்த நிலையில் உள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டது. அதில் ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 994-ம், 2 கிராம் தங்கம், 90 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
10-ந் தேதி 7 திறந்த நிலை உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.6 லட்சத்து 65ஆயிரத்து 610 மற்றும் 5 கிராம் தங்கம், 272 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்த வருடம் மாசிக்கொடை நாட்களில் மொத்தம் ரூ.42 லட்சத்து 87 ஆயிரத்து 920-ஐ பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.