கலைஞர் மகளிர் உரிமை திட்டம்:611 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியதுகலெக்டர் உமா பார்வையிட்டார்


கலைஞர் மகளிர் உரிமை திட்டம்:611 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியதுகலெக்டர் உமா பார்வையிட்டார்
x
தினத்தந்தி 25 July 2023 12:30 AM IST (Updated: 25 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கலைஞர் உரிமை திட்ட விண்ணப்பபதிவு முகாம் 611 இடங்களில் தொடங்கியது. இந்த முகாமை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டார்.

விண்ணப்ப பதிவு முகாம்

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாமை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நேற்று 611 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி திருமண மண்டபம், சின்னவேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம், கீழேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுப்புளியம்பட்டி கிராம சேவை மையம், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடம் மற்றும் வேலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப பதிவு முகாம்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அடிப்படை வசதிகள்

இந்த ஆய்வின்போது, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி உள்ளிட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். மேலும் விண்ணப்ப பதிவு முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும், ஆவணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, நகராட்சி ஆணையாளர்கள் சென்னுகிருஷ்ணன், ஜெயராமராஜா, தாசில்தார்கள் சக்திவேல், பச்சமுத்து, கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், பாஸ்கர், கஜேந்திர பூபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். முதல்கட்ட முகாம் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதியும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி 16-ந் தேதி வரை 303 இடங்களில் நடைபெற இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story