சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 8 Aug 2023 12:30 AM IST (Updated: 8 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

3 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்களை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் கடந்த 2018 -ம் ஆண்டு 2 சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரியவந்தது. பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்தால் சுற்றி உள்ள விவசாய நிலங்கள், அருகில் உள்ள 3 கிராம மக்கள், அரசு நடுநிலைப்பள்ளி, விவசாய கிணறுகள், ஆழ்துளை குழாய் கிணறுகள், குளங்கள், காற்று ஆகியவை மாசடைந்து கடுமையாக பாதிக்கப்படும்.

தீர்மானம்

அதனால் 2 சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக எலந்தகுட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராம சபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சுற்றுப்பயணத்தின் போதும், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், முன்பு இருந்து கலெக்டர் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டது. அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனால் 3 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, 2 சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையங்களை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

இதேபோல் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்ல எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை உழவர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, மானிய விலையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் விற்பனை செய்ய வேண்டும்.

மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதார விலையாக, ரூ.150 நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு, பச்சை தேங்காயை டன் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரதுக்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்குரூ.3 ஆயிரம், பசும்பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.75 வழங்க வேண்டும்.

தமிழக அரசு காவிரியின் உபரிநீரை நீரேற்று திட்டம் மூலம் திருமணிமுத்தாறுவுடன் இணைத்திட வேண்டும். வளையப்பட்டி சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.


Next Story