பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுரை


பள்ளி மாணவ, மாணவிகள்  கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுரை
x

பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தினார்.

நாமக்கல்

பள்ளி மாணவ, மாணவிகள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தினார்.

பயிற்சி முகாம்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இளைஞர் நீதிக்குழுமம், சுகாதாரத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேற்கொள்ள உள்ள விண்ணைத்தொடு, ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் ஆகிய 2 திட்ட நல்வழி காட்டுதல் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் விண்ணைத்தொடு பயிற்சி கையேடு மற்றும் ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் திட்டத்தின் ஒட்டுவில்லைகளை வெளியிட்டு பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் வளரிளம் பருவத்தினருக்கு செல்போன் உலகத்தில் ஏற்படும் திசைதிருப்ப பிரச்சினைகளில் இருந்து விடுவித்து, சரியான இலக்கினை அடைய உறுதி எடுக்கசெய்து, அவர்கள் கல்வி மற்றும் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய செய்தல் ஆகியவற்றுக்காக 177 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ள உள்ள விண்ணைத்தொடு வழிகாட்டுதல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

இதேபோல் மாவட்டத்தில் 2,520 கிராமங்களில் 13 வயது முதல் 18 வயது வரையுள்ள 45 ஆயிரம் வளரிளம் பெண் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட "ஒன்றுபடுவோம் உறுதியேற்போம்" என்ற தொடர் பிரசார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை குழந்தை திருமணம் மற்றும் பாலியல் வன்முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள வளரிளம் பெண் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு வகுப்பை மேற்கொள்வார்கள்.

மேலும் ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் எங்கள் குழந்தைக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்றோர்களை ஏற்க செய்து, இந்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் வீடுகளின் முன் பகுதியில் அங்கன்வாடி பணியாளர்களால் ஒட்டப்பட உள்ளன.

புகார் தெரிவிக்கலாம்

பெண் குழந்தைகள் கட்டாயம் 18 வயது வரை கல்வி பயில வேண்டும். 18 வயது முடியும் முன்னர் திருமணம் செய்யக்கூடாது. மனதளவில் பிரச்சினைகள் ஏற்படும் போது அந்த பிரச்சினையிலிருந்து வெளியே வந்து எப்படி வாழ்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என தேவையான ஆலோசனைகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டில் உள்ளவர்களுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். 181, 1098 ஆகிய இலவச தொலைபேசி எண்களை மனதில் பதித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பேசும்போது, மாணவ, மாணவிகள் சமூக வலைதளங்களை தேவையின்றி பயன்படுத்த கூடாது. சமூக வலைதளங்களில் தங்களது பெயர், புகைப்படம் உள்ளிட்டவைகளை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்த கூடாது. செல்போன்கள் மூலமாக தங்களுக்கு பணம் தரப்படும், வேலை வழங்கப்படும் என்று வரும் தகவல்களை நம்பி ஏமாறக்கூடாது என்றார்.

பின்னர் கலெக்டர் பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநத்தம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) பரிமளாதேவி, உதவித்திட்ட அலுவலர் (சுகாதாரம்) ரமேஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story