தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் தொழில் முனைவோருக்கு 50 சதவீத மானியம் கலெக்டர் சாந்தி தகவல்


தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவிலான  ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் தொழில் முனைவோருக்கு 50 சதவீத மானியம்  கலெக்டர் சாந்தி தகவல்
x

தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத மானியம் வழங்குகிறது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தின் சார்பில் அரசு மானியத்துடன் கூடிய சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தர்மபுரி மாவட்டத்தில் அமைக்க ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக உருவாக வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு அரசு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 கோடியே 50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

2 ஏக்கர் நிலம்

இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்காக்கள் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்துடன் குறைந்தபட்சமாக 3 தொழிற்கூடங்களுடன் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளி பூங்காக்க அமைப்பதற்கு தேவையான நிலம், சாலை வசதி, சுற்றுசுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் கொண்டதாகவும், ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர பல்வேறு வசதிகளுடனும், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட உட்பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும்.

எனவே தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க முன்வரும் தொழில் முனைவோர் சேலம் குகை பகுதியில் உள்ள துணிநூல் துறையின் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்கள் விண்ணப்பங்களை வழங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, துணிநூல் துறையின் சேலம் மண்டல துணை இயக்குநர் அம்சவேணி, தர்மபுரி சிப்காட் திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், சிட்கோ கிளை மேலாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில்மைய உதவிப்பொறியாளர் சவுந்தர்யா உட்பட அரசு அலுவலர்கள், ஜவுளி உற்பத்தி தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story