நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கும் வகையில்  பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தர்மபுரி

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டு தொகை கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை மொரப்பூர், கம்பைநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீரை பாப்பாரப்பட்டி, இண்டூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்பும் கால்வாய் அமைத்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சோதனை முறையில் கூட கால்வாயில் தண்ணீர் விடவில்லை. இந்த கால்வாய் மூலம் பஞ்சப்பள்ளி அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும்.

நியாயமான இழப்பீடு

மாவட்டத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கால்நடைகளை பராமரிப்பதற்கான செலவு, மாட்டு தீவனங்களின் விலை உயர்வு ஆகியவற்றால் பால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்ற உறுதியை தமிழக அரசு அளிக்க வேண்டும். தர்மபுரி, மொரப்பூர், கம்பைநல்லூர் பகுதிகளில் நோய் தொற்று காரணமாக கருகிய நெல் பயிர்களுக்கு காப்பீட்டு திட்டம் மூலம் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். பயிர் சேதத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

விரிவான திட்ட அறிக்கை

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் செய்து ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சக்திவேல், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story