தர்மபுரி மாவட்டத்தில், 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் கொசப்பட்டியில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில், 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் கொசப்பட்டியில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் காந்தி பிறந்த நாளையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன. கொசப்பட்டியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டம்
மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்தந்த ஊராட்சிகளில் நடைபெற்ற கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினர். இதில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
மேலும் இந்த கூட்டங்களில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கூட்டங்களில் கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கொசப்பட்டி
மொரப்பூர் ஒன்றியம் கொசப்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலு தலைமை தாங்கினார். சம்பத்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:- மக்களின் தேவைகளுக்காக அரசு சுகாதார வளாகங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்டவைகளை உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்வதோடு, அதனை பாதுகாத்து, பராமரித்து, தூய்மையாக வைக்க முன்வர வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், இருப்பிடங்களை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தனபால், மொரப்பூர் ஒன்றியக்குழு உறுப்பினர் முனியம்மாள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, தாசில்தார் கனிமொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.பி.ரவிச்சந்திரன், ஜி.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.