கல்வி உதவித்தொகை வேண்டி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
கல்வி உதவித்தொகை வேண்டி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.
கல்வி உதவித்தொகை வேண்டி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.
கல்வி உதவித்தொகை
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
வங்கி கணக்கு
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் அதற்கான படிவங்களை தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை வருகிற 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.
இணையதளம்
சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (scholarship portal) புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் மாதம் 6-ந்தேதிக்கு முன்பும், டிசம்பர் மாதம் 15-ந் தேதியில் தொடங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 20-ந்தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் கேட்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.
https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes என்ற அரசு இணையதளத்திலும் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.