மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி
x

மடத்துக்குளம் அருகே நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

திருப்பூர்

மடத்துக்குளம் அருகே நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

கடன் வழங்கும் முகாம்

மடத்துக்குளத்தை அடுத்த சங்கராமநல்லூர் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் புதிய சுய உதவி குழுக்கள் அமைத்தல், சுழல் நிதி வழங்குதல் மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்குதல் முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி தொகுதி சண்முகசுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-

'தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுயஉதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசார்புத்தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச்செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இதுவரை 3494 சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நகர்ப்புறத்தைச் சேர்ந்த 2484 சுய உதவி குழுக்களுக்கு வங்கி நேரடிக்கடனாக ரூ.131.42 கோடி, சுய தொழில் தொடங்க தொழில் கடனாக 84 குழுக்களுக்கு ரூ.19.08 கோடி, 1982 தனி நபர்களுக்கு ரூ.1.38 கோடி, 1135 பயனாளிகளுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

சங்கராமநல்லூர் பேரூராட்சி

2016-22-ம் ஆண்டில் சங்கராமநல்லூர் பேரூராட்சியில் 28 சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் 296 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 11 நபர்களுக்கு தனி நபர் கடனாக ரூ.9.12 லட்சமும், தொழில் கடனாக 7 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27.30 லட்சமும், வங்கி நேரடி கடனாக 15 குழுக்களுக்கு ரூ.58.54 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் தற்போது வரை 11 சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு இதில் 132 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 3 பேருக்கு தனிநபர் கடனாக ரூ.4.50 லட்சமும், தொழில்கடனாக 2 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.80 லட்சமும், வங்கி நேரடி கடனாக 5 குழுக்களுக்கு ரூ22.98 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் 32 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல்நிதியும், 15 சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நேரடி கடனாக ரூ.64.70 லட்சம் கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மதுமிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஈஸ்வர சாமி, சங்கராமநல்லூர் பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராசு, செயல் அலுவலர் பிரேமலதா மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story