தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பை போட்டி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
தர்மபுரியில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி இந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்தி வரவேற்றார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
முழு ஒத்துழைப்பு
இதையடுத்து கலெக்டர் சாந்தி பேசுகையில், விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்த மேற்கொள்ளபட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போட்டிகளை சிறப்பாக நடத்த அனைத்து விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதில் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பாஸ்கர், கால்பந்து விளையாட்டு சங்கத்தலைவர் ஆனந்தன், இறகுப்பந்து விளையாட்டு சங்கத்தலைவர் கோபி உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.