தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் இலக்கை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்மாணவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுரை


தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் இலக்கை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்மாணவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுரை
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் தங்களது இலக்கினை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என மாணவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர்


2022-23-ம் கல்வியாண்டில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டி 23.11.2022 முதல் 28.11.2022 வரை பள்ளி அளவிலும், அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டி நடத்தப்பட்டது.

35 மாணவர்கள் சாதனை

பின்னர் வட்டார அளவிலான போட்டியில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022 வரை போட்டி நடத்தப்பட்டது. இதில் முதலிடத்தை பெற்ற 491 பேர் மாநில அளவில் 27.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 35 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மேலும், மாணவர்கள் மது, புகையிலை போன்ற எவ்வித தீயப்பழக்கத்திற்கும் ஆட்படாமல் இருக்க வேண்டும். சூழ்நிலைகளை காரணமாக கொண்டு உங்கள் பாதையில் இருந்து மாறிவிடக்கூடாது. படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொள்ள வேண்டும். தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் தங்களது இலக்கினை அடைய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நேர்மையாக நல்லெண்ணங்களுடன் செயல்பட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும் என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.


Next Story