குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறலாம் - நாகை கலெக்டர் அருண்தம்புராஜ்
குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறலாம் என நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறலாம் என நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறுவை சாகுபடி
நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 13 ஆயிரத்து 120 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டு முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்திருப்பதாலும், நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்து கூடுதல் மகசூல் பெற முடியும். இதற்காக ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ, டி.ஏ.பி. 50 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ போன்ற இடுபொருட்கள் 100 சதவீத மானியத்தில் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
மாற்றுப்பயிர்கள்
குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தரமான நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், விதை கிராம திட்டத்தின் மூலம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வழங்கப்படுகிறது. மேலும் குறுவையில் மாற்றுப் பயிராக சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ரூ.1120-ம், குறுவையில் மாற்றுப்பயிராக பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2050-ம், குறுவையில் மாற்றுப்பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.8004-ம் வழங்கப்படுகிறது. எனவே குறுவை விவசாயிகள், குறுவை தொகுப்பு திட்டத்தை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.