மாணவர்கள் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும் - கலெக்டர்
மாணவர்கள் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
மாணவர்கள் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
கோடைகால பயிற்சி முகாம்
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்த கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ், பயிற்சி பெற்ற 201 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கால்பந்து- தடகளம்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதோருக்கான கோடைகால பயிற்சி முகாம் தொடங்கியது.
இந்த பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துபந்து, வளைகோல்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 132 மாணவர்கள், 69 மாணவிகள் என மொத்தம் 201 பேர் கலந்து கொண்டனர்.
விளையாட்டுக்கு நேரம்...
இங்கு பயிற்சி பெற்றவர்கள் பயிற்சியுடன் நின்று விடாமல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்ல வேண்டும். மாணவர்கள் படிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல், விளையாட்டிற்கும் நேரம் ஒதுக்கி ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.