கலெக்டர் ஆகாஷ் நேரில் விசாரணை


கலெக்டர் ஆகாஷ் நேரில் விசாரணை
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளத்தில் கலெக்டர் ஆகாஷ் நேரில் விசாரணை நடத்தி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளத்தில் கலெக்டர் ஆகாஷ் நேரில் விசாரணை நடத்தி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புகார்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் ஒரு தரப்பு பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் உள்ளிட்ட பொருட்கள் வழங்க மறுத்ததையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாஞ்சாகுளம் கிராமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதையடுத்து பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாகுபாடு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

கல்வி அதிகாரி ஆய்வு

இந்தநிலையில் பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மொத்தம் உள்ள 23 மாணவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர். பல மாணவ- மாணவிகள் வங்கி கணக்கு இணைப்பு பெறுவதற்காக சங்கரன்கோவில் சென்று விட்டதால் பள்ளிக்கு வரவில்லை, என தெரிவிக்கப்பட்டது.

பள்ளியில் உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த கபீர் ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் அன்றாட நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் பள்ளியில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பேட்டி

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, இப்பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி தொடர்பாக கூறப்பட்ட புகார் ஆதாரமற்றது. முறையான விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

கலெக்டர் விசாரணை

இதன் பின்னர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுப்புலட்சுமி பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் மாலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் பாஞ்சாகுளம் கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு விசாரணை நடத்தினர்.



Next Story