டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வழங்கினால் கடும் நடவடிக்கைஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சரயு எச்சரிக்கை


டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில்  மருந்து வழங்கினால் கடும் நடவடிக்கைஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சரயு எச்சரிக்கை
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் மருந்து, ஊசி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு எச்சரித்தார்.

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், டெங்கு காய்ச்சல் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

குடிநீர் தொட்டிகள் குளோரினேஷன் செய்யவும், மழைநீர் தேங்காத வகையில் டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்த விவரங்களை அதிகாரிகளுக்கு தினமும் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு காய்ச்சல் பற்றிய தடுப்பு நடவடிக்கை எடுத்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும். தனியார் பரிசோதனை மையங்கள், டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற காய்ச்சல்களை கண்டறிய ரேபிட் டெஸ்டிங் கிட்சை பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாவட்டத்தில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், தனியார் மருத்துவமனைகளில் மருந்து, ஊசி வழங்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொள்ளும் போது, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட நோய் தடுப்பு அலுவலர் டாக்டர்.அமுதவள்ளி, வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story