தனியார் உரக்கடைகளில்தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கைகலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை


தனியார் உரக்கடைகளில்தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கைகலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
x
சேலம்

தனியார் உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, மாவட்டத்தில் சில உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்து வருகின்றனர். இதை கண்காணித்து தடுக்க வேண்டும். நிலங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஏற்காட்டில் காபி, மிளகு போன்ற பயிர்களை காட்டெருமைகள் மற்றும் குரங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மலைப்பகுதிகளில் விரைவில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட உள்ளது. இதனால் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.

கடும் நடவடிக்கை

இதையடுத்து கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள விவசாயிகளின் நிலங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் வளர்ப்பு முறைகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.


Next Story