டிஜிட்டல் பேனரால் அசம்பாவிதம் ஏற்பட்டால் பணியிடை நீக்கம் அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
திருவண்ணாமலை,
பேனரால் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதிகாரிகள் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் வைத்தல், சுவரொட்டி ஒட்டுதல் தொடர்பாக வரன்முறை செய்தல் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-
திருவண்ணாமலை நகர் மற்றும் அதையொட்டி உள்ள கிராமப் பகுதிகளில் தற்போது அதிக அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்து ஒழுங்குபடுத்த எடுத்த நடவடிக்கையால் 6 மாதமாக தொல்லைகள் ஏதும் இல்லாமல் இருந்தது, தற்போது மீண்டும் அவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கண்ணீர் அஞ்சலி பேனர்கள், திருமண வரவேற்பு பேனர்கள் ஏராளமாக போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்படுகிறது.
பேனர்களும் உடனடியாக அகற்றப்படாமல் பல நாட்களாக உள்ளது. இதை அதிகாரிகள் கண்காணித்து பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பேனரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியிடை நீக்கம்
குறிப்பாக பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர சுவரொட்டிகளையும் அழிக்க வேண்டும். குறிப்பாக நகர சாலைகள் உள்ள சென்ட்ரல் மீடியங்களில் ஒட்டப்பட்டுள்ளது. அதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி சார்பிலும் இதை முறையாக கண்காணிக்க வேண்டும். இனி வருங்காலங்களில் பேனர் வைக்கப்பட்டதன் காரணமாக ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் (பொது) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.