அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை பொதுமக்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவற்றை அமைக்கக்கூடாது. இச்சட்டம் 13.4.2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனால் அனுமதியின்றி ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அதேபோல் உரிமக்காலம் முடிந்த பின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகளையும் அகற்றிட வேண்டும். மேற்கூறிய விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது 3 வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முழு பொறுப்பு
மேலும் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் வைக்கும் நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். எனவே, விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பர பதாகைகள் அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் தான் முழு பொறுப்பாவார்கள். மேலும், உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவலை கடலூா் மாவட்ட கலெக்டா் அருண்தம்புராஜ் தொிவித்துள்ளாா்.