நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா: தேசியக்கொடியை நாளை கலெக்டர் அரவிந்த் ஏற்றுகிறார்


நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா: தேசியக்கொடியை நாளை கலெக்டர் அரவிந்த் ஏற்றுகிறார்
x

நாகர்கோவிலில் சுதந்திர தினவிழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) தேசியக்கொடியை கலெக்டர் அரவிந்த் ஏற்றி வைக்கிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் சுதந்திர தினவிழாவையொட்டி நாளை (திங்கட்கிழமை) தேசியக்கொடியை கலெக்டர் அரவிந்த் ஏற்றி வைக்கிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தினவிழா

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 9.05 மணிக்கு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

பின்னர் பலவேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள், போலீசாருக்கு நற்சான்றிதழ் மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது.

கலைநிகழ்ச்சி-அணிவகுப்பு ஒத்திகை

இந்த விழாவில் 8 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அணிவகுப்பில் ஈடுபடும் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

சுதந்திர தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. மக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

2 ஆயிரம் போலீசார்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கும், முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களும் போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புக்குழும போலீசாரும் ரோந்து படகுகளில் கடற்கரையோரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகள் பலத்த பரிசோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட எல்லைப்பகுதிகள் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சுதந்திர தின பாதுகாப்பு பணியில் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.


Next Story