மனு கொடுக்க வரும்போதுதீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கைகலெக்டர் சரயு எச்சரிக்கை


மனு கொடுக்க வரும்போதுதீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கைகலெக்டர் சரயு எச்சரிக்கை
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும்போது தீக்குளிக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சரயு எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர்கள் சரண்யா, பாபு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காளியப்பன்,் துரைசாமி, கனிம வளத்துறை துணை இயக்குனர் வேடியப்பன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஓட்டுனர் உரிமத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும். இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்லக்கூடாது.

வேகத்தடை

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனத்தை வேகமாக செல்வதால் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பின்றி உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, பள்ளி பகுதி மற்றும் சோமார்பேட்டை முதல் தானம்பட்டி வரை செல்லும் சாலை வளைவில், சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்திட வேண்டும்.

மேலும், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டான்கொட்டாய் பகுதியில் தடுப்புச்சுவரின் இடைவெளியை மூடி பெரிய வாகனங்கள் சாலையை கடக்க ஏதுவாக பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், கே.ஆர்.பி அணை - காவேரிப்பட்டணம் சந்திப்பு சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

இதே போல் உத்தனப்பள்ளி முதல் சூளகிரி வரை செல்லும் சாலையில் கீரனப்பள்ளி பிரிவு பாதை அருகே எச்சரிக்கை பதாகைகள் மற்றும் வேகத்தடைகள் அமைப்பது குறித்தும், பீர்ஜேப்பள்ளி முதல் உத்தனப்பள்ளி சாலையில் உள்ள அகரம் முருகன் கோயில் அருகே வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். ஓசூர்-பாகலூர் சாலையில் சமத்துவபுரம் ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடி அருகே எச்சரிக்கை பதாகைகள் மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி திரிவேணி கிரஷர் பிரிவு பாதையில் விபத்தை தடுக்க எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் சிலர் தவறான வழிகாட்டுதலால் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்கின்றனர். இனி வருங்காலங்களில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story