கடன் வழங்காத வங்கிகள் உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேச்சு


ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு இதுவரை கடன் வழங்காத வங்கிகள் உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும் என வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வலியுறுத்தினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு இதுவரை கடன் வழங்காத வங்கிகள் உடனடியாக கடனுதவி வழங்க வேண்டும் என வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வலியுறுத்தினார்.

வங்கியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வங்கி சேவைகள் குறித்து வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், வேளாண்மை துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், கூட்டுறவுத்துறை, தாட்கோ மற்றும் பல்வேறு துறைகளில் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அரசின் மாநிலத்துடன் கூடிய கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்கி செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பெருவாரியாக வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது தகுதியான விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கடன் உதவி வழங்க வேண்டும் என்றும், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு கடன் உதவிகளை இதுவரை வழங்காத அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக் கொண்டார்.

பரிசு

அதனைத் தொடர்ந்து கடந்த நிதியாண்டில் மகளிர் குழுக்களுக்கு அதிகப்படியான வங்கி கடன் வழங்கியமைக்காக இந்தியன் வங்கிக்கு முதல் பரிசும், ஆற்காடு கனரா வங்கிக்கு இரண்டாம் பரிசும், கூட்டுறவு வங்கிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் சுஜாதா ஜேக்கப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்ன குமார், முன்னோடி வங்கிகள் மேலாளர் ஆலியம்மா ஆபிரகாம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story