மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட கலெக்டர்


மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட கலெக்டர்
x

தழுக்கண்வட்டம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக கலெக்டர், அவரது மனைவி அழைத்து வரப்பட்டனர்.

திருப்பத்தூர்

தழுக்கண்வட்டம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக கலெக்டர், அவரது மனைவி அழைத்து வரப்பட்டனர்.

2 கிலோ மீட்டர் நடந்த கலெக்டர்

திருப்பத்தூர் ஒன்றியம் சார்பில் குரிசிலாபட்டு ஊராட்சி தழுக்கண்வட்டம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா, அவரின் மனைவி பங்கேற்றனர்.

விழாவில் பங்கேற்க வந்த அவர்களை அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகளுடன் 2 கிலோ மீட்டர் தூரம் காலணி அணியாமல் நடந்தே தழுக்கண்வட்டத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர், மனைவிக்கு கிராம மக்கள் தாரை, தப்பட்டை அடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர் சரோஜா, தாய் வீட்டு சீதனமாக வளையல், சேலைகள் மற்றும் மங்கல பொருட்களை கலெக்டரின் மனைவிக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக சமர்ப்பித்தார்.

வேட்டி அணிந்து வந்தார்

கலெக்டரும் தமிழக பாரம்பரியப்படி வேட்டி, மேல்துண்டு அணிந்து பங்கேற்றார். அங்கு, புதுப்பானையில் நெருப்பு மூட்டி பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்-அமைச்சர் கையெழுத்திட்ட புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்து மடலை கலெக்டர், பொதுமக்களுக்கு வழங்கினார்.

முன்னதாக சமத்துவ பொங்கல் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், வேளாண்மை இணை இயக்குனர் பாலா, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், மணவாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொங்கல் சாப்பிட்ட கலெக்டர்

அதேபோல் கந்திலி ஒன்றியம் உடையாமுத்தூர் சமத்துவபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழா கலெக்டர் தலைமையில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயார் செய்யப்பட்டு முதல்-அமைச்சர் கையொப்பமிட்ட புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து மடலை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

அங்கு வரையப்பட்டிருந்த வண்ணக்கோலங்களை கலெக்டர் பார்வையிட்டார். கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழாவில் வழங்கப்பட்ட பொங்கல் உணவை அரசு அலுவலர்களுடன் கலெக்டர் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட அலுவலர் செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, துரை, ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story