பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
திருவாரூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.
திருவாரூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 294 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு தொகைக்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார். பின்னர் 2020-ம் ஆண்டு ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தினை சிறந்த முறையில் செயல்படுத்திய அலுவலகமாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு கேடயம் வழங்கினார்.
நிவாரண நிதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கிராமத்தை சேர்ந்த வெரோனிக்கா எஸ்தர் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததை அடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வரப்பெற்ற ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.
இதேபோல் தமிழ்நாடு விளையாட்டு சிலம்பு கழகம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற ஐ.எஸ்.ஆர். மார்சியல் ஆர்ட் அகாடமி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.