ராமநாதபுரம் பள்ளி மாணவ, மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க செல்லும் ராமநாதபுரம் பள்ளி மாணவ-மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க செல்லும் ராமநாதபுரம் பள்ளி மாணவ-மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
தமிழகத்தில் முதன் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புகள் மற்றும் மாநில சதுரங்க கழகம் ஆகியவற்றின் அனுமதியுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அரசின் நிதி உதவியுடன் செஸ் உலகின் பொக்கிஷமாக கருதப்படும் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 25-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து நாடு முழுவதும் மாணவ, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய சதுரங்க சம்மேளனம் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி மாநில சதுரங்க கழகத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேரில் பார்க்க அனுமதி
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்வையிடும் வாய்ப்பினை வெற்றிபெறும் ஒரு வீரர் ஒரு வீராங்கனைக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான சதுரங்க போட்டி 2 நாட்கள் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 21, 22-ந்தேதிகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் 210 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்றது. பெண்கள் பிரிவில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக்பள்ளி மாணவி மிருதுளா மற்றும் ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ரக்சன் ஆகியோர் முதலிடம் பெற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பை பெற்றனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம்வர்கீசை செஸ் ஒலிம்பியாட் போட்டியினை பார்வையிட செல்லும் மாணவி மிருதுளா மற்றும் மாணவன் ரக்சன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.