கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை
x

சேலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தினார்.

சேலம்

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை, தடுப்பூசி செலுத்திய விவரம், நோய்த்தடுப்பு உபகரணங்கள் இருப்பு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனை விவரங்கள், ஆக்சிஜன் படுக்கை விவரங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

கொரோனா பரிசோதனை

சேலம் அரசு ஆஸ்பத்திரி, அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா சிகிச்சைக்கென சாதாரண படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகளை ஒதுக்கி அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் திரவ ஆக்சிஜன் பிளான்ட், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்ற உபகரணங்களை முழு கொள்ளளவு திறனுடன் இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் தினமும் கொரோனா மாதிரி பரிசோதனையை 4,500-ல் இருந்து அவசர காலத்திற்கு 6 ஆயிரம் வரை அதிகரிக்க போதுமான நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவக்கல்லூரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளில் தேவைப்படும் கட்டிட பராமரிப்பு மற்றும் ஆக்சிஜன் குழாய்கள் சீரமைப்பது போன்ற பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

முககவசம்

கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்தால் சிகிச்சை மேற்கொள்ள தேவையான டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பொதுமக்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் அடிக்கடி சோப்பு கொண்டு கைக்கழுவதல் அல்லது கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா நோய் அறிகுறிகளான தொண்டையில் தொற்று, சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறி இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் மணி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (நலப்பணிகள்) நெடுமாறன், துணை இயக்குனர்கள் நளினி, ஜெமினி, மாநகர நல அலுவலர் யோகானந் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story