பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த கலெக்டர்


பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த கலெக்டர்
x

மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலெக்டர் முருகேஷ் விசாரணை செய்தார்.

திருவண்ணாமலை

மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலெக்டர் முருகேஷ் விசாரணை செய்தார்.

தர கண்காணிப்பு மையம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் ஒருங்கிணைந்த முதல்வரின் முகவரி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.

மனுக்கள் அனைத்தும் முறையாக தீர்வு செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்தில் "தர கண்காணிப்பு மையம்" உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவர்கள் அளித்த மனுக்கள் உண்மையில் தீர்வு செய்யப்பட்டதா? என்பதையும், பதில்கள் கடிதம் வாயிலாக பெறப்பட்டதா? என்பதையும் உறுதி செய்கின்றனர்.

கலெக்டர் நேரில் பேசினார்

விசாரணையின் போது முறையாக தீர்வு செய்யப்படாத மனுக்கள் மீண்டும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 7 நாட்களுக்குள் தீர்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் கலெக்டர் முருகேஷ் இன்று மனுக்கள் அளித்த நபர்களை தொலைபேசி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதல்வரின் முகவரி இணையதளத்தில் பதிவு செய்துள்ளவாறு உண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும், பதில்கள் கடிதங்கள் வழி பெறப்பட்டதா என்பதையும் உறுதி செய்தார்.

இதில் முறையான பதில் அளிக்காத ஒரு மனுவினை மீண்டும் தொடர்புடைய அலுவலருக்கு அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார். இதர மனுதாரர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், பொதுமக்கள் அளித்த கோரிக்கைளில் நிராகரிக்கப்பட்ட மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு அதற்கான காரணம் மற்றும் விடுபட்ட ஆவணங்கள் குறித்தும் தொடர்புடைய அலுவலரால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்களாலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும். முதல்வரின் முகவரி வாயிலாக பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் விரைவாகவும், அதே சமயத்தில் உரிய வகையிலும் தீர்வு செய்வதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.


Related Tags :
Next Story