புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி `டெபிட் கார்டுகள்' மாணவிகளுக்கு கலெக்டர் வழங்கினார்
புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி `டெபிட் கார்டுகளை மாணவிகளுக்கு கலெக்டர் வழங்கினார்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்டத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி டெபிட் கார்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநலஅலுவலர் நித்யா, மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.புதுமைப்பெண் திட்டத்தில் முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் 4,163 மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறுகையில், "புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் 1,730 மாணவிகளை தேர்வு செய்து, இந்தநிகழ்ச்சியில் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மாணவிகளுக்கு அவர்களுடைய வீட்டு முகவரிக்கு டெபிட் கார்டு அனுப்பப்படும்.
திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நிலமாக இதுவரை 81 ஏக்கர் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் கணக்கெடுக்கும் பணி முழுமையாக முடியும்" என்று கூறினார்.