சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூரில் கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை


சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூரில் கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கரூர்

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதான புறாக்களையும், தேசியக் கொடி வண்ணத்திலான பலூன்களையும பறக்கவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்.

நலத்திட்ட உதவிகள்

இந்நிகழ்ச்சியில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பள்ளிக்கூட மணியடிச்சாச்சு திட்டம், கலங்கரை விளக்கம் திட்டம், விடியல் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 405 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். மேலும் சிறந்த விவசாயி, சிறந்த தொழில்முனைவோர், தீண்டாமை இல்லா கிராமம், குழந்தை திருமணம் நடைபெறா கிராமம் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் 59 பேருக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 26 ஆயிரத்து 225 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலைநிகழ்ச்சிகள்

இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் 10 பள்ளிகளை சேர்ந்த 362 மாணவ, மாணவிகள் மற்றும் 34 ஆசிரியர்கள் என மொத்தம் 396 பேர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், ஆயுதப்படை மற்றும் பயிற்சி காவலர்கள் சார்பில் சிலம்பம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பயிற்சி காவலர்களின் கராத்தே நிகழ்ச்சியும், மாவட்ட துப்பறிவு மோப்ப நாய் படை மற்றும் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பின்னர் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story