பம்புசெட் மின்மோட்டார் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


பம்புசெட் மின்மோட்டார் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

அரசு மானியம் மூலம் மின்மோட்டார் பம்புசெட் வாங்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

அரசு மானியம் மூலம் மின்மோட்டார் பம்புசெட் வாங்க சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மின்மோட்டார்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடி நீர்பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (மூன்று ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) புதிய மின்மோட்டார் பம்புசெட்டு மானியத்தில் வாங்குவதற்கு, தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் 28 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இதற்காக ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.

இதில், ஏற்கனவே மின்இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற டீசல் பம்புசெட்டு அல்லது பழைய மின்மோட்டார்களை மாற்ற விரும்புபவர்கள் மற்றும் புதிய ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள் 10 குதிரைத்திறன் வரையிலான புதிய மின்மோட்டார் மாற்றிக்கொள்ள பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரை படம், சிறு, குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் மின்இணைப்பு அட்டை ஆகிய விவரங்களுடன் வேளாண்மை பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யப்படுபவர்கள் வேளாண்மை பொறியியல் துறை, தலைமை பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின்மோட்டார் வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கை தொண்டி ரோட்டில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளர் சிவகங்கை அலுவலகத்திலும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூர் சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் காரைக்குடி அலுவலகத்திலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story