மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தாய், சேய் இறப்பு இல்லை-கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேச்சு


மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தாய், சேய் இறப்பு இல்லை-கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேச்சு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தாய், சேய் இறப்பு இல்லை என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார். ஊட்டச்சத்து குறித்த உறுதிமொழியை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.

பின்னர் வட்டார அளவில் வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டச்சத்து குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து கிராமங்கள், நகரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து கவனிக்கவும், வீட்டுத்தோட்டம் அமைக்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. இதேபோல், கிராம அளவிலான சமூக காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தை திருமணம் குறைந்துள்ளது

மருத்துவ குழு மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை மைய குழந்தைகளுக்கு மருத்துவ ஆய்வு செய்ய வேண்டும். மிகவும் பலவீனமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். மேலும், அங்கன்வாடி பணியாளர்களும், கிராமங்களில் உள்ள சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு, வீடாக சென்று பொதுமக்கள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 3 மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய், சேய் இறப்பு இல்லை. மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சி

முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சிறு தானியங்கள், பழ வகைகள், கீரை வகைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு உண்பது குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி, தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், மாவட்ட பசுமை திட்ட ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கெலமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி நன்றி கூறினார்.


Next Story