வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உதவித்தொகை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். இதில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்

தொடர்ந்து, பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட மாட்டாது. தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது. 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வீதம் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளலாம். சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story