அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்-கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில், புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில், புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
புத்தக திருவிழா
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் புத்தக திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, பயனுள்ள வகையில் புத்தகங்களை வழங்கிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாணவிகளுக்கு பல்வேறு வகையான புத்தகங்களை வழங்கி பேசியதாவது.:-
மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புகள் உள்ளது. அதில் கூடுதலாக, சிறப்பு சேர்க்கின்ற வகையில், தற்போது சிவகங்கையில் கடந்தாண்டு வெகு சிறப்பாகவும், பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும் வகையில் நடைபெற்ற புத்தக திருவிழா மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இப்புத்தக திருவிழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் கிராமப்புறங்களிலுள்ள நூலகங்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாயிலாக பல்வேறு வகையான புத்தகங்களை வழங்கிடவும், நூலகங்களை தத்தெடுப்பதும், அந்த நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு புத்தகம்
தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களை ஒருங்கிணைத்து, புத்தகங்கள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான தொடக்க நிகழ்வு இப்பள்ளியில் நடைபெறுகிறது. மாணவ, மாணவிகளும் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி, எதிர்கால வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு அடிப்படையாக திகழ்ந்திடும் வகையிலும், பயனுள்ள வகையிலும் பல்வேறு புத்தகங்களை வழங்குவதே இதன் நோக்கமாகும். எனவே, மாவட்ட நூலகம், கிராமப்புற நூலகம், பள்ளி நூலகங்கள் ஆகியவைகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.