விவசாயிகளிடம் இருந்து 3,162 டன் நெல் கொள்முதல்-கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 3,162 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 3,162 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழக்கண்டனி, வேம்பத்தூர் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் வாகுடி, பீசர்பட்டினம் ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையங்களை, மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை துரிதமாக கொள்முதல் செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3,162 டன்
சிவகங்கை மாவட்டத்தில் 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த நெல்கொள்முதல் நிலைய பணிகளை ஆய்வு செய்து வருகின்றேன். அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் சாலை வசதி, வாகன வசதி, இட வசதி போன்றவற்றை கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 3,162 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் அருண்பிரசாத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.