வேறு மாவட்டம் செல்வதை தவிர்க்க உழவன் செயலியில் பதிவு செய்யலாம்


வேறு மாவட்டம் செல்வதை தவிர்க்க உழவன் செயலியில் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் கூலித்தொழிலாளர்கள் தங்களின் வேலை வாய்ப்பிற்காக பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க உழவன் செயலியில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

வேளாண் கூலித்தொழிலாளர்கள் தங்களின் வேலை வாய்ப்பிற்காக பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க உழவன் செயலியில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

வேளாண் செயலி

விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும், விவசாய கூலித்தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பயன்பெறும் நோக்கத்தில் ஒரு செயலி வேளாண்மை உழவர் நலத்துறையின் வாயிலாக உருவாக்கப்பட்டு, இது உழவன் செயலியில் ஒரு சேவையாக சேர்க்கப்பட்டுள்ளது. வேளாண் கூலித்தொழிலாளர்கள் தங்களின் வேலை வாய்ப்பிற்காக சிவகங்கை மாவட்டத்தை விட்டு பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதை தவிர்த்து உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு விவசாயிகளின் திறமைக்கு ஏற்றவாறு சிறந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திடவும் விவசாயிகள் விவசாய பணிகளை உரிய பருவத்தில் மேற்கொள்ள இச்செயலி உதவுகிறது.

மேலும் விவசாய பணிகளுக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கும் செயல் ரீதியாக தொழிலாளா்களை தாமதமின்றி கண்டறியவும் இச்செயலி உதவுகிறது. இதில், பதிவு செய்வதற்கு வயது வரம்பு 18 முதல் 60 வரை ஆகும். வேலை நேரம் காலை 8 மணி முதல் 4 மணி வரை.

ஊதியம் நிர்ணயம்

வேளாண் கூலித்தொழிலாளர்களுக்கான தினக்கூலி மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். வேளாண் தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவது மாவட்ட கலெக்டரால் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்படும். இந்த செயலி விவசாயிகளையும், தொழிலாளர்களையும் நேரடியாக இணைக்கும். இதில், ஒரே தளத்தில் விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் திறமையான வேளாண் தொழிலாளா்களை கண்டறிந்து பயன்படுத்திக்கொள்வதற்கும், விவசாய கூலித்தொழிலாளா்கள் ஆண்டு முழுவதும் சொந்த மாவட்டங்களிலேயே வேலை வாய்ப்புகளை பெறுவதால் பிற மாநிலங்களுக்கு செல்லாமல் இருப்பதற்கும் இச்செயலி வழிவகுக்கும்.

பதிவு செய்யலாம்

விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் தங்கள் கைபேசி எண், ஆதர் எண் மற்றும் வங்கி புத்தகத்துடன் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். எனவே வேளாண் கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் இந்த செயலியில் பதிவு செய்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story