நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் புகார் செய்யலாம் கலெக்டர் தகவல்


நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் புகார் செய்யலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

நெல் அறுவடை

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்திற்கு அறுவடை எந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதினால், இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்கள் அதிக வாடகையில் இயக்குவதாக விவசாயிகளிடமிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சக்கர வகை நெல் அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.1,600 என்ற வாடகையும், செயின் வகை அறுவடை எந்திரங்களை மணிக்கு ரூ.2,400 என்ற வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

இந்த கட்டணத்தை மீறி கூடுதலாக பணம் வசூலித்தால் அது குறித்து விவசாயிகள், வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

விவசாயிகளின் நன்மைக்காக, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மாநில அளவில் உள்ள தனியார் அறுவடை எந்திரங்களின் பதிவு எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வேளாண் பெருமக்கள் உழவன் செயலியில் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்பதை தேர்வு செய்து, மாவட்டம் மற்றும் வட்டார வாரியாக நெல் அறுவடை எந்திரம் சொந்தமாக வைத்துள்ள உரிமையாளர்கள் விவரம் மற்றும் தொலைபேசி எண்களை நேரடியாக தொடர்பு கொண்டு, இடைத்தரகர்கள் இன்றி அறுவடை எந்திரங்களை பெற்று பயன் அடையலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.


Next Story