அதிக பொருட்களுக்கு சான்றிதழ் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் அதிகமான பொருட்களுக்கு சான்றிதழ் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் அதிகமான பொருட்களுக்கு சான்றிதழ் பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு 2-வது இடத்தை பெற்றுள்ளது.
புவிசார் குறியீடு
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மண்ணின் பாரம்பரிய பெருமையை எடுத்துரைக்கும் பொருளின் சிறப்பிற்கு ஏற்ப புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழகத்தில் ஏற்கனவே 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் விளையும் ஊதா, பிங்க் மற்றும் பச்சை நிறம் கலந்த கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் விளையக்கூடிய குண்டு மிளகாய் என 2 உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில் இதற்கான புவிசார் குறியீடு வழங்க அனுமதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது இடத்தை பெற்றுள்ளது. ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இந்த மாவட்டத்திற்கு கிடைத்த பெருமை மிகு அடையாளம் ஆகும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
தற்பொழுது குண்டு மிளகாய் உற்பத்தியில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையக்கூடிய குண்டு மிளகாய் அதிக காரத்தன்மையும், சுவையும் கொண்டுள்ளதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 200 ஆண்டு காலமாக உற்பத்தி செய்யப்படும் இந்த குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.
இங்கு விளையக்கூடிய குண்டு மிளகாய் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவது மட்டுமின்றி கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.