ஒரு குவிண்டால் கொப்பரைக்கு ரூ.10,860


ஒரு குவிண்டால் கொப்பரைக்கு ரூ.10,860
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்றும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 860 வழங்கப்படும் என்றும் கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

மதுரை

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்றும், ஒரு குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 860 வழங்கப்படும் என்றும் கலெக்டர் அனிஷ் சேகர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்னை விவசாயிகள்

வாடிப்பட்டி மற்றும் மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் அரவை கொப்பரை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்து 860 என்ற குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விலை திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் செப்டம்பர் மாதம் வரை வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் செய்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாடிப்பட்டி, மேலூர் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் தென்னை சாகுபடி செய்ததற்கான அசல் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன் வாடிப்பட்டி, மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இப்போதே பதிவு செய்யலாம்.

பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ள அரவை கொப்பரையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு குறைவாகவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதத்திற்கு குறைவாகவும், சுருக்கம் கொண்ட கொப்பரைகள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும், ஈரப்பதமானது 6 சதவீதத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

வங்கி கணக்கு

ஆய்வக தரப்பரிசோதனை செய்து மேற்கண்ட நியாயமான சராசரி தரத்தின்படி உள்ள அரவை கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்பட்ட அரவை கொப்பரைக்கான தொகை விவசாயின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இது தொடர்பாக, வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் 87789 81501 என்ற எண்ணிலும், மேலூர் பகுதி விவசாயிகள் 96290 79588 என்ற எண்ணிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், விவசாயிகள் தங்களது வட்டார விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலர்களிடமும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலத்திலும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story