பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட320 விவசாயிகளுக்கு நிவாரண நிதி கலெக்டர் தகவல்
சிவங்கை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 320 விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவங்கை மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 320 விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
பயிர்கள் பாதிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 82,290 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி மழையளவான 413.4 மி.மீ.க்கு பதிலாக 305.61 மி.மீ. பெறப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டில் ஜனவரி மாதம் மழை பெய்யவில்லை. பிப்ரவரி 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் பெறப்பட்டது. சராசரி மழையளவு பிப்ரவரி மாதம் 13.6 மி.மீ. பெறப்பட்ட மழையளவு 52.84 மி.மீ. இது சராசரியை விட 39.24 மி.மீ அதிகமாகும்.
பருவம் தவறிய மழையினால் சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை, சாக்கோட்டை, கல்லல் ஆகிய வட்டாரங்களில் நெல் பயிர் அறுவடை ெசய்யும் நிலையில் சாய்ந்து பாதிப்படைந்தது. இதுகுறித்து, தமிழக அரசின் உத்தரவின்படி, பயிர் பாதிப்படைந்த விவரம் வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையின் மூலம் கூட்டுத்தணிக்கை செய்த பின் விவசாயிகள் வாரியாக கணக்கெடுக்கப்பட்டது.
கருத்துரு அனுப்பப்பட்டது
அதன்படி சிவகங்கை வட்டாரத்தில் 2 கிராமங்களில் 32 விவசாயிகளுக்கு 11.08 எக்டேர் பரப்பிற்கு ரூ.2,21,600 மதிப்பீட்டிலும், காளையார்கோவில் வட்டாரத்தில் 3 கிராமங்களில் 7 விவசாயிகளுக்கு 3.70 எக்டேர் பரப்பிற்கு ரூ.74,000 மதிப்பீட்டிலும், தேவகோட்டை வட்டாரத்தில் 65 விவசாயிகளுக்கு 27.10 எக்டேர் பரப்பிற்கு ரூ.5,42,000 மதிப்பீட்டிலும், கல்லல் வட்டாரத்தில் 2 கிராமங்களில் 14 விவசாயிகளுக்கு 6.48 எக்டேர் பரப்பிற்கு ரூ.1,29,600 மதிப்பீட்டிலும், மானாமதுரை வட்டாரத்தில் 4 கிராமங்களில் 42 விவசாயிகளுக்கு 11.95 எக்டேர் பரப்பிற்கு ரூ.2,39,200 மதிப்பீட்டிலும், சாக்கோட்டை வட்டாரத்தில் 160 விவசாயிகளுக்கு 69.4235 எக்டேர் பரப்பிற்கு ரூ.13,90,070 மதிப்பீட்டிலும் பாதிப்பு கணக்கெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மாவட்டத்தில் மொத்தம் 320 விவசாயிகளுக்கு, 129.7335 எக்டேர் பரப்பிற்கு மொத்தம் ரூ.25,96,470 மதிப்பீட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கென அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் உத்தரவு
முதல்-அமைச்சா் இந்த ஆண்டு ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு, 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.25 ஆயிரமும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகைகளுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
முதல்-அமைச்சர் உத்தரவின்படி, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.