அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-சிவகங்கை கலெக்டர் தகவல்


அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-சிவகங்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

உதவித்தொகை

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்

மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது. 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் காலாண்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற, வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறலாம். சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story