கண்மாய், குளங்களில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


கண்மாய், குளங்களில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கண்மாய், குளங்களில் வண்டல் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்

சிவகங்கை

சிவகங்கை,

விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க விரும்பும் விவசாயிகள் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சேமித்து வைக்க கூடாது

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

1959-ம் வருட தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் விதி எண் 12(2) (அ) -ன்படி, விவசாயிகள் தங்கள் வயல்களின் மண்வளத்தினை மேம்படுத்துவதற்காகவும், மண் பாண்டங்கள் செய்வதற்காகவும், சிவகங்கை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள 612 கண்மாய் மற்றும் குளங்களில் வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

வண்டல் மண், களிமண் எடுக்கும் போது கண்மாய் குளத்தின் கரையின் உயரத்தின் இரண்டு மடங்கு தொலைவில் சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வண்டல் மண், களிமண் அள்ள வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது.

மேலும் கண்மாய், குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக்கூடாது. கண்மாய், குளத்தின் கரையின் குறுக்கே குறுக்கு பாதைகள் ஏற்படுத்தக் கூடாது. வண்டல், களிமண்ணை எக்காரணம் கொண்டு சேமித்து வைக்க அனுமதி இல்லை.

வண்டல் மண்

வண்டல் மண், களிமண் எடுக்கும் போது கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பாடுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக் கூடாது. டிராக்டரில் மட்டுமே வண்டல் மண், களிமண் எடுத்து செல்ல வேண்டும்.

இந்த விதிகளுக்குட்பட்டு விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கத்தினர் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல்மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம்.

விண்ணப்பம்

வண்டல் மண், களிமண் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் களிமண் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story