வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
தமிழக அரசின், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இ்தில் பயன்பெற விரும்பும் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை வேலைவாய்ப்புத்துறை இணையதள முகவரியில் (tnvelaivaaippu.gov.in) பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.