பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயார்- கலெக்டர் அருண்தம்புராஜ்


பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயார்- கலெக்டர் அருண்தம்புராஜ்
x

பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நாகப்பட்டினம்

பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

பேரிடர் மீட்பு

நாகை அருகே பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள அந்தணப்பேட்டை பெருமாள் கோவில் குளத்தில் பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி நேற்று நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, மின்சார துறை, கால்நடை துறை என அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்பார்வையில் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

மழை, வெள்ளம், தீ விபத்து, சுனாமி, கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற பேரிடரில் சிக்கி தவிப்பவர்களையும், கால்நடைகளையும் உயிருடன் மீட்பது குறித்து அனைத்து துறையினரும் செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியை பார்வையிட்ட நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியதாவது:-

மின் வினியோகம்

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனைத்து துறை அதிகாரிகள் உதவியுடன் பேரிடர் ஏற்படும் போது பொதுமக்களை எவ்வாறு உயிருடன் மீட்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்குதல் போன்ற செயல் விளக்கத்தை செய்து காட்டி உள்ளனர்.

புயலின்போது மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் அதை மீண்டும் நேராக நிமிர்த்தி மின் வினியோகத்தை சீர் செய்வது குறித்து மின்சார துறையினர் செய்து காட்டினர். அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்படும் போது சாலையில் சேதம் ஏற்பட்டால் அந்த சாலையை சீர் செய்வது மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள்

நாகை மாவட்டத்தில் 5 இடங்களில் இது போன்ற செயல் விளக்க பயிற்சி முகாம்கள் நடந்துள்ளன. பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டும் இன்றி கால்நடைகளையும் உயிருடன் மீட்க அனைத்து துறை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story