வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு மையம் அமைக்க மானியம்


வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு மையம் அமைக்க மானியம்
x

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண் எந்திரங்கள்

தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை பழுது நீக்கும், பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கலாம்.

மேலும் விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்யவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் பழுது நீக்கும் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

ரூ.4 லட்சம் மானியம்

தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியத்தில் மையம் அமைத்து தரப்படும். இந்த மையங்கள் ரு.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்தினை அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story