விபத்து நடந்த பகுதியில் கலெக்டர் ஆய்வு
நன்னிலம் அருகே, வாய்க்காலில் கார் பாய்ந்து விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வேகத்தடைகள் அமைக்க உத்தரவிட்டார்.
நன்னிலம் அருகே, வாய்க்காலில் கார் பாய்ந்து விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வேகத்தடைகள் அமைக்க உத்தரவிட்டார்.
வாய்க்காலில் கார் பாய்ந்தது
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நன்னிலம்- நாச்சியார் கோவில் நெடுஞ்சாலையில் சிகார் பாளையம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் வாய்க்காலில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த நிலையில் விபத்து நடந்த சிகார் பாளையம் வளைவு சாலையினை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிகார்பாளையம் வளைவு சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வேகத்தடைகள்- பிரதிபலிப்பான்கள்
அங்கு சாலையில் வேகத்தடைகள், பிரதிபலிப்பான்கள், சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்திகா, ஒன்றிய ஆணையர் சந்தான கிருஷ்ண ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.