அகனி மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
சீர்காழி அருகே அகனி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். அப்போது அவர் சத்துணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார்.
சீர்காழி;
சீர்காழி அருகே அகனி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். அப்போது அவர் சத்துணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகனி ஊராட்சியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பின்னர் பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை நேரில் பார்வையிட்டு அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஆய்வு செய்து சமையல் அறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து பள்ளி வளாக பின்புறம் செடி கொடிகள் மண்டி கிடப்பதை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சீரமைக்க ஆணையர் இளங்கோவனை கேட்டுக் கொண்டார்.
கட்டிடம்
அப்போது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் இடம் நெருக்கடியாக உள்ளது. எனவே கூடுதலாக வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது ஆணையர் இளங்கோவன், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, ஊராட்சி தலைவர் மதியழகன், துணைத் தலைவர் தமிழ் வேணி செந்தில்குமார், ஊராட்சி செயலர் வீரமணி ஆகியோர் இருந்தனர்.