ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
குத்தாலம்;
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் கலெக்டர் மகாபாரதி ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் கடலங்குடி, அசிக்காடு, கோமல், பருத்திக்குடி, பாலையூர், மாதிரி மங்கலம், கடக்கம், மங்கநல்லூர், கங்காதரபுரம், சேத்திரபாலபுரம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள், ஊராட்சி அலுவலர்களிடம் வளர்ச்சி பணிகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் குமார், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், உமாசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவாவடுதுறையில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.