வளர்ச்சி திட்டப்பணிகளை தர்மபுரி கலெக்டர் ஆய்வு
ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஏரியூர்
தடுப்பணை
மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் சுஞ்சல்நத்தம் ஊராட்சியில் ரூ.17¼ லட்சம் மதிப்பீட்டில் ஈச்சப்பாடி ஓடையில் புதிய தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏரியூர் பழத்தோட்டத்தில் ரூ.7¾ லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், ரூ.24½ லட்சம் செலவில் நாற்றாங்கால் பண்ணை அமைக்கப்பட்டு வரும் பணியையும் கலெக்டர் பார்itயிட்டார். மேலும் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் பண்ணை அருகில் புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
சமுதாய உடல்நல மையத்தில் ஆய்வு
இதைத்தொடர்ந்து ஏரியூர் அரசு சமுதாய உடல்நல மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர், இந்த மையத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் தரமாகவும், துரிதமாகவும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக மேற்கொண்டு, விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும்,மூங்கில் மடுவு ரேஷன் கடைக்கு சென்ற கலெக்டர், அந்த கடையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பொதுவினியோகத்திட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தரமாகவும், எடை அளவு குறையாமலும், தாமதமின்றி வழங்க வேண்டுமென ரேஷன்கடை பணியாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் சித்ரா விஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், உதவி பொறியாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.