புதுச்சத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


புதுச்சத்திரம் ஒன்றியத்தில்  வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நாமக்கல்

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊராட்சி மன்ற அலுவலகம்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி செல்லப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 106 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு அகலம் மற்றும் தரம் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

இதேபோல் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செல்லப்பம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாளம்பாடி குடித்தெருவில் 99 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் தினந்தோறும் வருவதை கேட்டறிந்து உறுதி செய்தார்.

கலந்துரையாடல்

கரடிப்பட்டி ஊராட்சியில் பள்ளிப்பட்டி முதல் எரமநாய்க்கனூர் வரை 400 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று உள்ளதை பார்வையிட்டு, சாலையின் தரம் குறித்து துளையிட்டு சரியான அளவிலான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

கரடிப்பட்டி ஊராட்சியில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் பாப்பிநாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கட்டும் பணியினை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஏழுர் ஊராட்சியில் வேப்பம்பட்டி மாதிரி பள்ளியில் ரூ.19 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி முழுவதும் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டு உள்ளதை பார்வையிட்டு, ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story