போடி அருகே பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணி; கலெக்டர் ஆய்வு


போடி அருகே பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணி; கலெக்டர் ஆய்வு
x

போடி அருகே பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் ஆய்வு செய்தார்.

தேனி

போடி அருகே சிலமலை ஊராட்சி பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் மணிமேகலை. இவர், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி. அவருடைய வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதே பகுதியை சேர்ந்த பெண்களின் உதவியுடன் மணிகேமலை பொது கழிப்பறைக்கு சென்று வந்தார். இதனால், அவர் சிரமம் அடைந்து வந்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவருடைய வீட்டுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிக் கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், மணிமேகலையின் வீட்டில் ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் பணி தொடங்கி உள்ளது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். பின்னர், சிலமலையில் உள்ள ரேஷன் கடை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு கலெக்டர் முரளிதரன் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் அவர் குறைகள் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story