ஓசூர் கே.சி.சி.நகர் பகுதியில் வெள்ளம்: மீட்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
ஓசூர் கே.சி.சி. நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் மீட்பு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார்.
ஓசூர்
வீடுகளில் வெள்ளம் புகுந்தது
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.சி. நகரில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோரும் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டனர்.
பின்னர் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஓசூர் தர்கா ஏரியில் இருந்து உபரிநீர் வரும்போது, கால்வாய் உடைப்பு ஏற்பட்டு கே.சி.சி.நகரில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயார் நிலை
மேலும் மழை அதிகமாகும் பட்சத்தில், பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல 2 திருமண மண்டபங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறை, மாநகராட்சி துறை, பொதுப்பணித்துறை தீயணைப்பு துறை, போலீஸ் துறை மூலம் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. மழை தீவிரம் அடைந்தால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.